சென்னை: வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை காவல்துறை தலைவர் மற்றும் அதிகாரிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

காவல்துறையினருக்கு சரியான முறையில் விடுமுறை வழங்கப்படாததால், சிலர் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை முடிவையும் நாடினர். இதனால், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என நீதிமன்றமும் வலியுறுத்தி வந்தது.

இதுகுறித்து திமுக ஆட்சிக்கு வந்ததும், நடைபெற்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில், சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான காவலர் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, சமீபத்தில் காவல்துறையினருக்கு  வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டு கடந்த 3 -ம் தேதி  அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்க நன்றி தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் முக ஸ்டாலினை இன்று காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.