புதுச்சேரி:
சாத்தான்குளம் சம்பவத்திற்கு போலீஸ் அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. டிவிட்டரில் டிரென்டிங்காகி உலக மக்களின் கவனத்துக்கு சென்றுள்ளது.
இந்தியாவின் நம்பர்1 காவல்துறை என்று பெயர்பெற்ற தமிழக காவல்துறையின், இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையின் காரணமாக தற்போது, கேலிப்பொருளாகி உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சாத்தான் குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு போலீஸ் அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், போலீசார் மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டுமே தவிர உயிரைப் பறிப்பது அல்ல என்றும் தெரிவித்தார்.