நிதி மோசடி வழக்குகளில் காவல்துறை முழு வங்கிக் கணக்கையும் முடக்க முடியாது என்றும் மோசடி செய்ததாக கூறப்படும் பணத்தை மட்டுமே முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தெலுங்கானா மாநில சைபர் கிரைம் (டிசிஎஸ்சிபி) போலீசாரின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஹெச்டிஎப்சி வங்கிக் கிளையில் உள்ள தனது வங்கிக் கணக்கு கடந்த ஓராண்டாக முடக்கப்பட்டுள்ளதாக முகமது சைபுல்லா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
காவல்துறையின் இந்த நடவடிக்கையால் அன்றாட தேவைகளுக்கான பணத்தைக் கூட எடுக்கமுடியாமல் நெருக்கடியில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், காவல்துறையினர் தனது வங்கிக் கணக்கை முடக்கி இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் வந்த மனு மீதான விசாரணையின் போது, மே 2023 இல் பதிவுசெய்யப்பட்ட கிரிப்டோகரன்சி வழக்கை விசாரித்து வரும் டிசிஎஸ்சிபி-யின் வேண்டுகோளின் பேரில் ஹெச்டிஎஃப்சி வங்கி இந்த வங்கிக் கணக்கை முடக்கியுள்ளதாக அதன் வழக்கறிஞர் செவானன் மோகன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உள்ளூர் காவல்துறை அல்லது நிதி மோசடிகள் உட்பட அனைத்து வகையான சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்டல் (NCCRP) இன் அறிவுறுத்தலின் பேரில் தங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படுவதாக நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகரித்து வருவதாக நீதிபதி தெரிவித்தார்.
தங்கள் வங்கி கணக்கு எதற்காக முடக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் அதேவேளையில் அவர்கள் பல்வேறு நிதி சிக்கலுக்கு ஆளாகின்றனர் என்றும் தெரிவித்தார்.
“விசாரணை நிலுவையில் உள்ள கணக்குகளை முடக்கவும், அதை சட்டப்பூர்வ நீதிமன்றங்களுக்கு உடனடியாக தெரிவிக்கவும் சம்பந்தப்பட்ட வங்கியைக் கோருவதற்கு விசாரணை நிறுவனங்களுக்கு சட்டங்கள் அதிகாரம் அளிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அதிகாரம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்பது இப்போது பெரிய கேள்வியாக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார். .
“கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காரணங்களைத் தெரிவிக்காதது மட்டுமல்லாமல், கணக்குகளை முடக்குவது குறித்து அதிகார வரம்புக்குட்பட்ட நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமல் வங்கிக் கணக்குகளை முடக்குவது, வங்கிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையே காட்டுகிறது” என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Cr.P.C.) பிரிவு 102க்கு பதிலாக ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ள பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 106, சொத்து பறிமுதல் குறித்து அதிகார வரம்பிற்குட்பட்ட நீதித்துறைக்கு புகாரளிக்க காவல்துறையை கட்டாயப்படுத்துகிறது என்பதை அவர் விளக்கினார்.
மனுதாரரின் வழக்கறிஞர் கப்லி தையப் கான், என்சிசிஆர்பி மூலம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டிஎஸ்சிஎஸ்பி பதிவு செய்த வழக்கு ₹2.48 லட்சமாக மட்டுமே, ஆனால் அவரது வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் ₹9.69 லட்சம் இருப்பு உள்ளதாகவும் இதனை கடந்த ஓராண்டாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, “நிதி மோசடி வழக்குகளில் முறையான நடவடிக்கை இன்றியும் காரணத்தை விளக்காமலும் காவல்துறை முழு வங்கிக் கணக்கையும் முடக்க முடியாது” என்றும் “சம்பந்தப்பட்ட மனுதாரரின் வங்கிக் கணக்கில் ₹2.48 லட்சத்தை மினிமம் பேலன்ஸாக வைத்து விட்டு மீதித் தொகையை அவர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வங்கி கணக்கை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க ஹெச்டிஎப்சி வங்கிக்கு உத்தரவிட்டு” நீதிபதி தீர்ப்பளித்தார்.