நெல்லை,

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக வாதாடி வரும் போராட்டக்குழு வழக்கறிஞர் திடீரென மாயமானார். அவர் போலீசாரால் கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

சமீபத்தில் அறப்போர் இயக்க பொருளாளர் திடீரென பொய்வழக்கு காரணமாக அதிகாலையில்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அணுஉலை எதிர்பாளரான வழக்கறிஞர்  நள்ளிரவு கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூடங்குளம் போராட்டக் குழு வழக்கறிஞர் செம்மணி நள்ளிரவில் போலீஸாரால் கடத்தப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், இந்திய அணுமின் கழகத்திற்கு சொந்தமான அணு உலைகள்  அந்த பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி அமைக்கப்பட்டு வருகின்றன.

அணு உலைகள் அமைவதற்கு அந்த பகுதி மீனவர்கள் உள்பட சுற்றுவட்டார பகுதி மக்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்து  இடிந்தகரை பகுதியில்  தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்கள் மீது அரசும், காவல்துறையும் தேசத்துரோக வழக்கு உள்பட பல வழக்குகள் போடப்பட்டு  நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அந்த பகுதி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று போராட்டக் காரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,  இந்த வழக்குகள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக  வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி என்கிற ராஜரத்தினம் ஆஜராகி வழக்கை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று  (3-ம் தேதி) நள்ளிரவில் வழக்கறிஞர் செம்மணியை  போலீசார் அவரது வீட்டில் இருந்த ரகசியமாக  கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால்,  வள்ளியூர் டி.எஸ்.பி. அலுவலகத்தைத் தொடர்புகொண்டால் இங்கே யாரையும் அழைத்து வரவில்லை என்று கூறுவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே செம்மணி என்கிற ராஜரத்தினத்தை திருநெல்வேலி மாவட்டம் உவரி காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை செய்வதாகவும், போலீசார் அவரை கடுமையாக தாக்கி இருப்பதாகவும், அவர் தற்போது  சிகிச்சைக்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிப்பதாகவும் கூறப்படுகிறது.

இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்ட வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தவும், இதுகுறித்து பார் கவுன்சிலில் முறையிடவும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அறப்போர் இயக்க பொருளாளர் மீதுபாமகவினர் கொடுத்த பொய் வழக்கின் அடிப்படையில் அதிகாலை அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை   திடீரென கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள  நிலையில், தற்போது அணுஉலை எதிர்பாளரான வழக்கறிஞரையும் நள்ளிரவு திடீரென  கைது செய்யப்பட்டிருப்பது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.