நெய்வேலி: மாஸ்டர் படப்பிடிப்பின் போது பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லேசான தடியடி நடத்தினர்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்எல்சி 2வது சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. 2 நாட்களாக விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜய்யை சென்னை அழைத்து சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
இந் நிலையில், என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என்று பாஜகவினர் 2வது சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தை அறிந்த விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்எல்சி 2 வது சுரங்கம் உள்ள பகுதியில் விஜய்க்கும், படக்குழுவிற்கும் ஆதரவாக குவிந்தனர். அதனால் அங்கு பதற்றம் உருவானது.
பாதுகாப்பு கருதி ரசிகர்களை கலைக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் நெய்வேலி சுரங்கம் முன்பு தடியடி நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே படப்பிடிப்பு நடத்தப்பட்ட பகுதியில், ரசிகர்கள் குவிந்து இருந்தனர். அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய விஜய் ரசிகர்கள் முன் தோன்றி கைகளை ஆட்டினார். அவரை கண்ட ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.