மெலட்டூர் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 2½ லட்சம் கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே வழுத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருபவர் மாதவன். இவர் கடந்த 28ம் தேதி நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த மோட்டார் சைக்கிளில் டாஸ்மாக் விற்பனை பணம் ரூ.2½ லட்சத்தை வைத்திருந்தார்.ரெங்கநாதபுரம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் திடீரென மாதவன் மீது மிளகாய் பொடி தூவினர். இதனால் நிலைகுலைந்த அவர் கூச்சல் மோட்டார். உடனே கும்பல், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்து ரூ.2½ லட்சத்தை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த மாதவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து டாஸ்மாக் விற்பனையாளர் மாதவனிடம் ரூ.2½ லட்சத்தை பறித்து சென்ற சம்பத் மற்றும் மணி, நரி என்கிற அரவிந்த் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

[youtube-feed feed=1]