லப்புழா

நேற்று ஆலப்புழாவில் உள்ள அரசு மருந்து குடோனில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

 

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள உளியகோவில் பகுதியில் அரசு மருந்து குடோன் உள்ளது.  இந்த மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் அனைத்தும் இங்குஇருப்பு வைக்கப்பட்டிருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த குடோனில் திடீரென தீப்பிடித்ததில் பல கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் தும்பா பகுதியிலுள்ள அரசு மருந்து குடோனிலும் தீப்பிடித்தது. இங்கும் பல லட்சம் மதிப்புள்ள மருந்துகள் எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்தில் ஒரு தீயணைப்பு வீரரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று அதிகாலை ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஒட்டியுள்ள அரசு மருந்து குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதை அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.   குடோனில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை நீண்டநேரம் போராடி அணைத்ததால் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இங்கும் ஏராளமான மருந்துகள் எரிந்து போனதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து கேரள மாநில அரசு மருந்து குடோன்களில் தீ பிடிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள அரசு கொரோனா காலத்தில் மருந்து வாங்கியதில் ஊழல் செய்ததாகவும், அதை மறைப்பதற்காகவே மருந்து குடோன்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் கூறின. ஆகவே இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என காவல்துறையினர் கருதுவதால் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.