சென்னை,

கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாய்ல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டிய கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப் பட்டடார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சுட்டக்கொல்லப் பட்ட காவல் ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

சென்னை ரெட்டேரி அருகே உள்ள நகைக்கடையில் இருந்‘து நகைகளை கொள்ளையடித்து சென்ற நகை கொள்ளையர்களை பிடிக்க சென்ற மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி தலைமையில் போலீஸ் குழுவினர் ராஜஸ்தான் சென்றனர்.

இந்நிலையில்  கொள்ளையர்கள் சுட்டதில் ஆய்வாளர் பெரியபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 தமிழக போலீசார் காயமடைந்தனர். இவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது,

சென்னை, கொளத்தூரில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் 16.11.2017 அன்று நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக, அண்ணாநகர் காவல் துணை ஆணையர் சுதாகர் அவர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு கிடைத்த சாட்சிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சென்னாராம், கேளாராம், தன்வர்ஜி மற்றும் சங்கர்லால் ஆகிய நான்கு நபர்களை 29.11.2017 அன்று காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த குற்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகள் என்பதை அறிந்த கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர், மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், தலைமை காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் முதல்நிலைக் காவலர் சுதர்சன் ஆகியோர் 8.12.2017 அன்று ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று இக்குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று (13.12.2017) அதிகாலை, ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பாலி மாவட்டத்தில் குற்றவாளிகள் தங்கியிருந்த கூடாரத்தை சுற்றி வளைத்து அவர்களை பிடிக்க முற்படும் போது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில், மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தன் கடமை ஆற்றும்போது ஏற்பட்ட இந்த துரதிஷ்டமான சம்பவத்தில் உயிரிழந்த பெரிய பாண்டியன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர், தலைமைக் காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் முதல்நிலைக் காவலர் சுதர்சன் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஆய்வாளர்  பெரியபாண்டியன் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். 

உயிரிழந்த பெரியபாண்டியனின் மகன்கள் செல்வன் ரூபன் மற்றும் செல்வன் ராகுல் ஆகியோரின் படிப்புச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஆய்வாளர் முனிசேகர், தலைமைக் காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் முதல்நிலைக் காவலர் சுதர்சன் ஆகியோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். 

மேலும், இவர்களது மருத்துவ செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும்.

நகை திருடிய வழக்கு மற்றும் காவலர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு தப்பிச் சென்றவர்களை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்து, விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது