சென்னை
தற்கொலை முயற்சி செய்த மாணவனுக்கு ஒரு காவல்துறை ஆய்வாளர் உதவி உள்ளார்
சில நேரங்களில் சீரியல்கள், சினிமாக்களை காட்டிலும் கண் முன் நிகழும் நிஜ சம்பவங்கள் கண்ணீர் சிந்த வைத்து விடும்.
சென்னையில் நிகழ்ந்த அப்படி ஒரு சம்பவம் இங்கே.
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் மாணவர் ஒருவர்.
பூர்வீகம் அந்தமான்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலில் அந்தமானில் உள்ள வீடு, வாசலை இழந்த அவரது குடும்பம் ராமநாதபுரத்துக்கு அகதிகளாக வந்துள்ளது.
அங்குள்ள சுனாமி காலனியில் குடியேறினர்.
அங்குள்ள பள்ளியில் பிளஸ் டு வரை படித்த மாணவனுக்குச் சென்னை கல்லூரியில் பி.ஏ. கிடைத்தது. சென்னையில் உள்ள அனாதைகள் இல்லத்தில் தங்கி இருந்து படித்து வருகிறார்.
சுனாமி போல், மீண்டும் அவரது குடும்பத்தில் மேலும் ஒரு தாக்குதல்.
நீரழிவு வியாதியால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையின் இரு கால்களும் வெட்டி எடுக்கப்பட்டன.படுத்த படுக்கையானார்.
மகனின் கல்லூரி கட்டணத்தை அவரால் கட்ட முடியவில்லை.
அண்மையில் பரீட்சை கட்டணத்தையும் கட்டாததால் மாணவர் வீட்டுக்கு ( விடுதிக்கு)அனுப்பப்பட்டார்.
மன உளைச்சலில் இருந்த மாணவர், எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சிக்க –
உடன் தங்கியுள்ள சகாக்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விஷம் வெளியேற்றப்பட்டு மாணவர் காப்பாற்றப்பட்டார்.
வழக்குப் பதிவு செய்து விட்டு , கூடுதல் விசாரணைக்கு மருத்துவமனைக்கு வந்த இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் , மாணவரிடம் முறைப்படி விசாரணை மேற்கொண்டார்.
மாணவனின் கதை கேட்டு ஆடிப்போனார்.
மாணவரின் பரீட்சை கட்டணத்தை அவரே செலுத்தினார்.
‘’இனிமேல் இது போன்ற விஷ பரீட்சைகளில் இறங்காதே. எந்த உதவி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்’’ என்று அந்த மாணவருக்கு ‘அட்வைஸ்’ செய்துள்ளார், அந்த இன்ஸ்பெக்டர்.
சல்யூட் சாரே.
– ஏழுமலை வெங்கடேசன்