அரசு டாக்டருக்கு உதவியதால் அபராதம் அழுத ஆட்டோ டிரைவர்..
சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் தனலட்சுமியின் வீடு அம்பத்தூரில் உள்ளது.
நேற்று வேலைக்குச் செல்வதற்காக வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஆட்டோ டிரைவர் அருள் என்பவரைச் சவாரிக்கு அழைத்துள்ளார், டாக்டர் தனலட்சுமி.
‘’ ஊரடங்கு காலம் என்பதால் ஆட்டோவை இயக்க அனுமதி இல்லை’’ என அந்த ஆட்டோ டிரைவர் அருள் சொல்லியுள்ளார்.
‘’நான் டாக்டர் என்பதால் போலீசார் எதுவும் சொல்ல மாட்டார்கள்’’ என கூறியதால்,அந்த டாக்டரை அருள், தனது ஆட்டோவில் ஏற்றி ஸ்டான்லி மருத்துவமனையில் விட்டு விட்டு, அம்பத்தூர் திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில் மாநகராட்சி சந்திப்பில் அருள் ஆட்டோவை மடக்கிய போலீசார், விதியை மீறி ஆட்டோ ஓட்டியதாக கூறி அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
‘’அரசு டாக்டரை ஆஸ்பத்திரியில் ‘டிராப்’ செய்து விட்டு வருகிறேன்’’ என அருள் சொன்னதை போலீசார் ஏற்கவில்லை.
அந்த டாக்டருக்கு , தனது நிலையை சொல்லி விளக்குவதற்கு போன் செய்தால், அவர் போனை எடுக்கவே இல்லை.
வேறு வழி இன்றி ’பைன்’ கட்டியுள்ளார், அருள்.
‘’அரசு டாக்டருக்கு உதவி செய்யப்போய் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே?’’ என சோகத்தில் ஆழ்ந்துள்ளார், ஆட்டோ ஓட்டுநர் அருள்.
– பா.பாரதி