சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இன்று இரண்டாவது முறையாக பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு அவரது காவலை நீட்டிக்கக் கோரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் காவலை ஜனவரி 29 வரை நீட்டித்து பாந்த்ரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் மும்பை பாந்த்ராவில் உள்ள சைஃப் அலி கான் வீட்டினுள் திருடுவதற்காக நுழைந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷாஜாத் என்ற நபர் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியதில் அவரின் முதுகுத்தண்டு மற்றும் உடலின் பிற பகுதிகளில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன.
சிகிச்சைக்காக உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சைஃப் அலி கான் சிகிச்சை முடிந்து கடந்த செவ்வாயன்று வீடு திரும்பினார்.
இந்த சம்பவத்தில் பிடிபட்ட முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷாஜாத்தை கைது செய்த மும்பை காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளி ஷெஹ்சாத்தை பாந்த்ரா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய மும்பை போலீசார் வழக்கில் போதுமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் பிற விளைவுகளை ஆராய வேண்டியது அவசியம் என்றும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர், மேலும், ஷெஹ்சாத்தின் காவலை நீடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த வழக்கில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிப்பதாகவும் வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க ஷெஹ்சாத் ஒத்துழைக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஷெஹ்சாத்தின் காவலை ஜனவரி 29ம் தேதி வரை நீடித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.