சென்னை

காணாமல் போனதாக கூறப்படும் சுற்றுச் சூழல் ஆர்வலர் முகிலன் இருப்பிடம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.

சமூக ஆர்வலரான முகிலன் கூடங்குளம், மணல் கடத்தல், ஸ்டெர்லைட் போன்ற பல சமுதாய பிரச்னைகளில் போராட்டம் நடத்தியவர் ஆவார். அத்துடன் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் முகிலன் பொறுப்பு வகிக்கிறார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கி சூடு நிகழ்ந்தது குறித்த வீடியோ ஆவணங்களை சமீபத்தில் முகிலன் வெளியிட்டார்.

அந்த ஆவணங்களை இந்த மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியிடும் போது முகிலன், “இந்த ஆவணங்கள் மூலம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது தெளிவாகி உள்ளது. அத்துடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் தீ வைக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. நான் இதை வெளியிட்டதால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்” என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் மதுரை செல்ல சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் காணாமல் போய் உள்ளார்.  இது குறித்து பதியப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணையில் உச்சநீதிமன்றம உத்தரவின் பேரில் காவல்துறை எழும்பூர் ரெயில் நிலைய கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளது.

காவல்துறை இது குறித்து நீதிமன்றத்திடம் ”முகிலன் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்துள்ளார். ஆனால் மதுரை செல்லும் ரெயிலில் ஏறாமல் வெளியே சென்றவர் மீண்டும் உள்ளே வரவில்லை. அவர் ரெயில் மார்க்கமாக செல்லாமல் வேறு மார்க்கமாக மதுரை சென்றிருக்கலாம்” என தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர் ஆசிர்வாதம், “முகிலன் ரெயிலில் பயணம் செய்யவில்லை என ஆரம்பத்தில் இருந்தே காவல்துறை கூறி வருகிறது. இப்போது அதை உறுதிப்படுத்த இவ்வாறு சொல்கிறது, ஆனால் இது தவறு என எனக்கு தோன்றுகிறது. அவர் ரெயிலில் தான் எப்போதும் பயணம் செய்வார். அதுவும் அன் ரிசர்வ்ட் பெட்டியில் தான் பயணம் செய்வார்,

ரெயில் நிலையத்தில் உணவுப் பொருட்கள் விலை அதிகம் என்பதால் அவர் மலிவாக உணவு சாப்பிட வெளியே வந்திருப்பார். அவர் ரெயிலில் மதுரை செல்ல உள்ளதாக என்னிடம் மட்டுமின்றி வேறு இருவரிடமும் தெரிவித்துள்ளார். அப்படி இருக்க அவர் தனது திட்டத்தை மாற்றிக் கொண்டிருக்க மாட்டார்.

காவல்துறை எதையோ மறைக்க முயல்கிறது. அவர் காணாமல் போய் இத்தனை நாட்களாகியும் அவரை காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.