சென்னை,
கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் சசிகலா தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனே அங்கிருந்து வெளியேறுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோல்டன் பே ரிசார்டில் இருந்து தப்பிவந்து ஓபிஎஸ்-சுடன் இணைந்த அதிமுக எம்எல்ஏ மதுரை சரவணன் கொடுத்துள்ள புகாரையடுத்து, சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்குள்ளவர்களை விசாரிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் சென்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஐ.ஜி. தாமரைக்கண்ணன், மற்றும் எஸ்.பி. முத்தரசி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் மீண்டும் கோல்டன் பே ரிசார்டுக்கு சென்றனர்.
அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாக அவர்கள் கூறினார்கள். ஆனால், அவர்களை உள்ளே விட மறுத்து அங்கு பாதுகாப்புக்காக இருந்த அதிமுக பிரமுகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்ய அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புகார் கூறப்பட்ட அதிமுக சட்டமன்றக்குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்கவும், அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும், உடனடியாக ரிசார்டை காலி செய்துவிட்டு வெளியேறுமாறு ரிசார்ட் உரிமையாளர் கூறிவிட்டதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது.
ஆனால்,அதிமுகவினர் வெளியேற முடியாதவாறு, சசிகலா தரப்பினரால் தடுக்கப்படுவதாகவும், என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கூவத்தூர் ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏக்கள் உட்பட அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக என்ன நடக்குமோ என எம்எல்ஏக்கள் பயந்துபோய் உள்ளனர்.