திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே உள்ள காட்டில் காட்டில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 8 பேர் வனத்துறை மற்றும் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர்  சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர் என்பது தெரிய வந்துள்ளது.

திருவள்ளூர்  அடுத்து உள்ளது வலசைவெட்டிக்காடு என்ற கிராமம். அதன் அருகே உள்ள   இலுப்பூர், மண்ணூர் போன்ற சில கிராமங்கள் கொண்ட பெரிய காட்டுப்பகுதி உள்ளது. இதை காப்பு காடு என்று அந்த பகுதி மக்கள் அழைக்கின்றனர். இங்கு மான்கள் உள்பட  வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில்,காட்டுக்குள் சிலர் துப்பாக்கிகளுடன் சுற்றுவதாகவும், அவர்கள் பயங்கரவாதிகளா அல்லது வன விலங்குகளை வேட்டையாட வந்தவர்களாக என்பது தெரியவில்லை என்று கிராமத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்..

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டஎஸ்.ஐ சுரேந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. தனிப்படை போலீசார் வனத்துறையினர் உதவியுடன் காட்டுக்குள் தேடுதல் வேட்டை நடத்தி, துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வலசைவெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த அருள்குமார்,  சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர் சுனில் கருணாகரன், சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாபு,  சிட்லப்பாக்கம் ரமேஷ், கொரட்டூர் சிலம்பரசன், அயனாவரம் பூபாலன், ஞானமூர்த்தி, ஊரப்பாக்கம் தங்கராஜ் ஆகியோர் என தெரிந்தது. இவர்கள் காடுகளில் முகாமிட்டு,  முயல், மான், மயில் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடி, அங்கேயே சமைத்து சாப்பிட்டதும் தெரிந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 4 நாட்டு துப்பாக்கிகள், 100க்கும் மேற்பட்ட தோட்டாக்கள், சமைக்கப்பட்ட 4 கிலோ  இறைச்சி, 2 சொகுசு கார்கள், 7 கத்திகள், டார்ச் லைட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை மணவாளநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இவர்கள் வனவிலங்குகள் வேட்டைக்கு வந்த வர்களா? அல்லது தீவிரவாதிகளுக்கும், இவர்களுக்கும் தொடர்பு  உள்ளதா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.