திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை, நகைகளுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

 

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் சுவரில் துளைப்போட்டு, 13 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகைகள் உள்ளிட்டவை நேற்று கொள்ளையடிக்கப்பட்டன. தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க, தனிப்படை காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூரில் கமலாம்மாள் நகர் பகுதியில் காவல்துறையினர் இரவு 9 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடமும் சோதனை நடத்தப்பட்டது. அந்த வாகனத்தை ஓட்டி வந்த மணிகண்டன் என்கிற நபர், லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் என்பதூ தெரியவந்தது. மேலும் அந்த நபர் 5 கிலோ எடை கொண்ட தங்க நகைகளையும் தன்னுடன் வைத்திருந்திருக்கிறார். அவரிடமிருந்து நகைகளை கைப்பற்றிய காவல்துறையினர், அவற்றின் பார் கோடுகளை ஒப்பிட்டு பார்த்தபோது, அவை திருச்சி லலிதா ஜூவல்லரியில் திருடப்பட்டது தான் என்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து அந்த நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், மணிகண்டனை திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். அத்தோடு, மணிகண்டனுடன் பைக்கில் பயணித்த மற்றொரு நபர் பற்றியும் காவல்துறையினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மணிகண்டனுடன் பயணித்த சுரேஷ் என்கிற நபர், காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.