சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் காவலர்கள்  டிக்கெட் எடுக்காமல் பயணிக்க  அனுமதி கிடையாது என  தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையினர் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில், போக்குவரத்து துறையினரன் நடவடிக்கை  காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக காவல்துறையினர் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும்போது, அரசு பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது வழக்கம். இதன் காரணமாக, பேருந்து நடத்துனர்களுக்கும் காவல்துறையினருக்கும் அவ்வப்போது தகராறுகளும் ஏற்படும். சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் காவலருக்கும் நடத்துனருக்கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பான வீடியோ வைரலானது.   சர்ச்சைக்குரிய நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில்,   காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினரிடம் கைது வாரண்ட் இருந்தால் மட்டுமே  அரசு  பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

திமுக அரசு பதவி ஏற்றதும், கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில்  நடைபெற்ற காவல்துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  காவல்துறையில் நிலவும் பதவி உயர்வு போன்ற பிரச்னையை தீர்க்க, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற திட்டத்தில் ஒரு பகுதியாக சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்றும்,  அரசு பேருந்து களில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பணி செய்யும் மாவட்டத்திற்குள் தங்களது அடையாள அட்டைகளை காண்பித்து இலவச பயணம் செய்யும் வகையில் நவீன அட்டை அட்டை வழங்குதல்,  இரண்டாம் நிலை காவலர் முதல் தலைமைக் காவலர்களுக்கான ஒரு நாள் வார விடுப்பு நடைமுறை, அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதுபோன்று, அவர்களின் மனைவிகளுக்கும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் மாநில நுண்ணறிவு பிரிவு, குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, பொருளாதார குற்றப்பிரிவு, கடலோர காவல் படை, ரயில்வே காவல் படை, காவலர் பயிற்சி பள்ளியில் பணிபுரியும் காவலர்கள் முதல் ஆய்வாளர்ளுக்கும், சென்னை மாநகர காவல் துறையில் வழங்குவது போன்று உணவுப்படி மாதந் தோறும் வழங்குதல், காவலர்களின் குறைதீர்க்க மாவட்ட , சரகம், மண்டல அளவில் ரூ.25 லட்சம் செலவில் தனிச் செயலி அறிமுகப்படுத்துதல், சிறப்பு உதவி ஆய்வாளருக்கான கால வரம்பை ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி யிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், தற்போது, போக்குவரத்து துறை, காவலர்கள் டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும் என கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, காவலர்கள் கைதிகளை அழைத்துச் செல்லும்போது, சில நேரங்களில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போதும், காவலர்கள் மற்றும் நடத்துனர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படும் சம்பவங்கள் நடைபெற்றன. சில காவலர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்று நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அதன் ஒரு தொடர்ச்சியாக கடந்த 2019 செப்டம்பர் மாதம் திருச்சியில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த காவலருக்கும், அரசு பேருந்து நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் மன உளைச்சல் ஏற்பட்டு அரசு பேருந்து நடத்துனர் கோபிநாத் என்பவர் நெஞ்சுவலி காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு விசாரணை செய்தது. அந்த வழக்கில் தமிழக டிஜிபி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த வழக்கின் அடிப்படையில் தமிழக டிஜிபி தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக காவலர்கள் கைது வாரண்ட் கையில் வைத்திருந்தால் இலவசமாக பயணிக்கலாம். மற்ற நேரத்தில் இலவசமாக பயணிக்க கூடாது என 2021 ஜூலை மாதம்  அப்போதைய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்திருந்தார்.  அதன்பிறகே சட்டமன்றத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், காவலர்களுக்கு இலவச பேருந்து பயணம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.