மதுரை:
துரையில் நேற்றிரவு பெய்த கனமழை கழிவு நீருடன் கலந்ததில் வைகை ஆற்றில் ஏற்பட்ட விஷ நுரை செல்லூர் பாலத்திற்கு வெளியே வந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரை கடந்து வடமேற்கு நோக்கி ஆந்திரா வழியே சென்றது.

இந்த புயலால் தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். புயலை தொடர்ந்து வேலூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், நேற்று இரவு மதுரையில் தொடர்ந்து 2 மணிநேரம் வரை கனமழை பெய்துள்ளது.

இதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கானது வைகை ஆற்றில் கலந்தோடியது. ஆற்றில் கழிவு நீரும் கலந்து சென்றுள்ளது. இதனால் நேற்றிரவு வைகை ஆற்றின் ஒரு பகுதி மற்றும் செல்லூர் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் விஷ நுரை மிதந்தது.

இந்த நுரையானது செல்லூர் பாலத்தின் மீது ஏறி வெளியே வந்தது. இதனால் அந்த வழியே வாகனத்தில் செல்வோருக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு இன்று தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் உடனடியாக வந்து வைகை ஆற்றின் ஒரு பகுதியில் திரண்டிருந்த நுரையை கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இதனை அந்த வழியே சென்றவர்கள் தங்களது மொபைல் போனில் படம் பிடித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.