சென்னை:

மிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விதி 110ன்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு திமுக எம்எல்ஏ ‘பாய்ன்ட் ஆப் ஆர்டர்’  குறித்து பேசினார்.

இது அவைக்குறிப் பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து, அவருக்கும், துரைமுருகனுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்டாலினும் விவாதம் செய்தார்.

தமிழக சட்டமன்றத்தில்  இன்று கேள்வி நேரம் முடிந்ததும், எப்போதும் போல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி  110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

அதைத்தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுந்து 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ கொண்டு வந்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், ஆஸ்டின் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர்,  சட்டசபையில் ஒரு பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பவும், விளக்கம் கேட்கவும் உரிமை உண்டு என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்த சபாநாயகர்,  110-வது விதியில் முதல்வர் பேசும்போது யாரும் அதில் குறுக்கிட கூடாது. விமர்சிக்க கூடாது என்று விதி உள்ளது. அதுபற்றி யாரும் விவாதிக்க கூடாது. எனவே அவர் குறிப்பிட்டதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி இருக்கிறேன் என்று விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய துரைமுரகன்,  முதல்வர் 110-வது விதியின்கீழ் அறிவிப்பதை மற்ற அமைச்சர் கள் பாராட்டி பேசுகிறார்கள். ஆனால் ஒரு உறுப்பினர் கருத்து சொல்லக்கூடாது என்பதை ஏற்க முடியாது என்று கூறியவர்,  110-வது விதியின் கீழ் ஒரு பொருள் பற்றி மட்டும்தான் அறிவிக்க வேண்டும். ஆனால் முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். அதை சுட்டிக்காட்டும் வகையில்தான் அவர் ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ கொண்டு வந்து பேசியதாக தெரிவித்தார்.

ஆனால், துரைமுருகனின் விவாதத்தை ஏற்க மறுத்த சபாநாயகர்,  110- வது விதியின் கீழ் முதல்வர் பேசியதற்கு பாராட்டு தெரிவிக்கலாம் என்று நான் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறேன். அதை ஏற்க வேண்டும். விமர்சிக்க கூடாது என்று பதில் அளித்தார்.

அதையடுத்து பேசிய துரைமுருகன், சபாநாயகரை நோக்கி, நீங்கள்  சொல்வதை மறுக்கவில்லை. ‘பாயிண்ட் ஆப் ஆர்டரை’ ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கக் கூடாது என்று வாதாடினார்.

தொடர்ந்து பேசிய  மு.க.ஸ்டாலின், பேரவையின்  விதிமுறையை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் எங்கள் உறுப்பினர் அதை கூறினார். அவருடைய உரிமை மறுக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து பேசிய  சபாநாயகர், நன்றி தெரிவித்து மட்டும் பேசலாம். விமர்சிக்கக் கூடாது என்ற எனது உத்தரவை மீறியதால் தான் அவரது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்று மீண்டும் தெளிவுபடுத்தினார்.

பின்னர் பேசிய துரைமுருகன்,  சபை நடைபெறும் போது அது திசை மாறி விடக்கூடாது என்பதற்காக தான் உறுப்பினர்கள் ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ கொண்டு வந்து அதை சுட்டிக்காட்டு கிறார்கள். அந்த உரிமை உறுப்பினர்களுக்கு உண்டு. இதை அவைத் தலைவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு காரசாரமாக விவாதம் நடைபெற்றது.