சென்னை:

ஹார்வார்டு பல்கலைகழக தமிழ் இருக்கை அமைய கவிஞர் வைரமுத்து தனது சார்பாக ரூ5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

உலகின் பழைமையான மொழிகளுக்கெல்லாம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தனித் துறை உள்ளது. ஆனால், தமிழ் மொழிக்கு என இதுவரை தனித்துறை  இல்லை. தமிழுக்குத் தனித்துறையைத் தொடங்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் அறிஞர்களால் கோரிக்கை வைத்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு  வந்தது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை தொடங்க வேண்டும் என்றால்,  ரூ.42 கோடி வழங்க வேண்டும். இதில் ரூ. 21 கோடியை உலகில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் அமெரிக்கவாழ் தமிழ் மக்களும் நிதியாக தந்து உதவி புரிந்துள்ளனர். மேலும் தேவைப்படும்  ரூ. 21 கோடியை வரும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என ‘ஹார்வர்ட் தமிழ் இருக்கை’ அமைப்பின் தலைவரா ஜானகிராமன் தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பாக  ரூ.9.75 கோடி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,  25 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி வழங்குவதாகவும் தெரிவித்தி ருந்தார். அதையடுத்து திரையுலகை சேர்ந்த நடிகர் விஷால் உள்பட ஒருசிலர் நிதி உதவி செய்வதாக கூறியிருந்தனர். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தனது சார்பாக  ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கினார்.

மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள்  ‘மொய் விருந்து’ நடத்தி 3 கோடி வசூல் செய்து தமிழ் இருக்கைக்காக உதவி செய்துள்ளனர்.

இந்நிலையில்,  வைரமுத்து ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். சென்னையில்  நடைபெற்ற விழாவில் நிதியை வழங்கி வைரமுத்து பேசியதாவது,

சீன மொழிக்கு இணையாக இருக்கும் மொழிதான் தமிழ் மொழி. இந்தியாவின் சரிபாதி பண்பாடு தமிழ் பண்பாடு .எல்லாத் தகுதியும் உடைய தமிழ் மொழியை ஹார்வர்டு பல்கலைக்கு தாமதமாக கொண்டு சென்றுள்ளோம் என்பதே என் ஆதங்கம். அறிவுலகம் வகுத்த தகுதிக்கும் மேல் தகுதி கொண்டது தமிழ் மொழி .

ஹார்வர்ட் தமிழ் இருக்கை தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் என நம்புகிறேன்.

சென்னை புத்தக காட்சியில் விற்பனையான தமது புத்தகங்களின் முழுத்தொகையை ஹார்வார்டு பல்கலைக்கழகத்திற்கு தமிழ் இருக்கை அமைக்க நிதியாக வழங்கியதாக கூறப்படுகிறது.