சென்னை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி, 2023ம் ஆண்டுக்கான ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களக்க வழங்கி கவுரவித்தார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு 2023ஆம் ஆண்டிற்கான , “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்” வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று பாடகி பி.சுசீலாவுக்கும், கவிஞர் மேத்தாவுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள், எனப் பல்வேறு நூல்களையும் படைத்து 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி தமது தனி முத்திரைகளைத் திறம்படப் பதித்தவர்வர் கவிஞர் மு.மேத்தா. இவர் எழுதிய, ‘ஊர்வலம்’ எனும் கவிதை நூலுக்குத் தமிழ்நாடு அரசின் முதல் பரிசும், ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ எனும் கவிதை நூலுக்கு, ‘சாகித்ய அகாடமி’ விருதும் பெற்ற பெருமைக்குரியவர்.
தம் வாழ்நாள் முழுதும் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் கவிஞர் மு.மேத்தாவைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால், வழங்கப்பட்டுள்ளது.
தேனினும் இனிய தனது குரலால் அனைவரையும் கவர்ந்து, ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலான தனது இசைப் பயணத்தில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தொடர்ந்து பாடி சாதனைகள் படைத்தவர் பாடகி சுசீலா. இசையுலகத்தினராலும், ரசிகர்களாலும் ‘இசைக்குயில்’ என்றும், ‘மெல்லிசை அரசி’ என்றும், ‘கான கோகிலா’ என்றும் பாராட்டப்பட்டவர். சிறந்த பின்னணிப் பாடகி எனத் தமிழ்நாடு அரசின் விருதுகளையும், மத்திய அரசின் விருதுகளையும் பலமுறை பெற்றுள்ளார்.