விவாகரத்து மற்றும் நிலத்தகராறுகளை தீர்த்துக்கொள்ள ‘போக்சோ’ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறியுள்ளதாக மனோரமா நாளிதழ் தெரிவித்துள்ளது.
கணவன் பெயரில் உள்ள சொத்தை அபகரிக்க நினைத்த அவரின் இரண்டாவது மனைவி, அதற்காக அவர் பெற்ற மகளை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார், மேலும் அந்த சிறுமியையும் தந்தை மீது குற்றம் சுமத்த தூண்டியிருக்கிறார்.
கேரள நீதிமன்றத்தில் இந்த விவகாரம் நிரூபணம் ஆனதால் கடந்த ஓராண்டாக சிறையில் இருந்த அந்த நபரை இந்த மாதம் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேபோல் வேறொரு வழக்கில் திருவானந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நான்கு குழந்தைகளின் மீது உரிமை கோரிய முதல் மனைவி மீது மகனை விட்டே தனது தாய் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக புகாரளிக்கச் செய்தார்.
இதனால் அந்த பெண்மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர், ஒருவாரம் ஆன நிலையில், விசாரணையில் இந்த புகார் போலியானது என்று நிரூபணமானதும் விடுதலையானார்.
குழந்தைகளை தவறாக பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் சொந்த பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தபடமால் காவல் துறையினர் கவனமாக இருக்கவேண்டும் என்று 2018 ம் ஆண்டே அம்மாநில காவல்துறை தலைவர் சார்பில் காவல்துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஒருவர் கூறுகையில், சமீபத்தில் இருவீட்டாருக்கு ஏற்பட்ட நிலத்தகராறில், சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு ஆதரவாக பக்கத்து வீட்டுக்காரர் மீது பாலியல் புகாரளித்ததும் பின்னர் தான் அளித்தது பொய் குற்றச்சாட்டு என்றும் அந்த சிறுமி ஒப்புக் கொண்ட விவகாரம் அரங்கேறியது.
கொலை உள்ளிட்ட பிற குற்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான ஆதாரங்களை வழங்க வேண்டியது வழக்கு தொடுத்தவரின் பொறுப்பாக உள்ள நிலையில், போக்சோ சட்டத்தில் மட்டும் குற்றம் சுமத்தப்பட்டவர் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதற்கான ஆதாரம் வழங்கவேண்டி உள்ளதால், அவர்களை போக்சோ சட்டத்தின் மூலம் எளிதாக சிக்க வைக்க முயற்சி மேற்கொள்கின்றனர்.
சமீப ஆண்டுகளாக போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி வழக்கு தொடுத்துவரும் நிலை அதிகரித்துவருவதால், குற்றச்சாட்டின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்வதைத் தவிர்த்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கு ஒன்றில் கேரள நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.