திருவண்ணாமலை: திமுகவில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விரைவில் வெளியேறுவார் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், திமுக உடனான கூட்டணி பலமாக உள்ளது என்றார்.

தி.மு.க.வுடன் பேசிக்கொண்டு அ.தி.மு.க.வில் பேரத்தை கூட்டுவது, அ.தி.மு.க.வுடன் பேசிக்கொண்டு தி.மு.க.வில் பேரத்தைக் கூட்டுவது.  இது அனைத்தும் பா.ம.க.வின் தேர்தல் தந்திரம் என்றும் விமர்சித்தார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி இடம்பெறும் கூட்டணியில் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில், இன்று  திருவண்ணாமலையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  செய்தியளார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. தலைமையிலான சனாதன சக்திகளை 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதற்கான வியூகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் உரையில் அழுத்தமாக குறிப்பிட்டார்.

காங்கிரஸ் அல்லாமல் ஒரு கூட்டணி அமைந்தால் அந்த கூட்டணி கரையேறாது. பா.ஜ.க.வையும் வீழ்த்த முடியாது. நாட்டிற்கும் பாதுகாப்பு இல்லை என்று அனைத்து பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகளுக்கும் அவர் உணர்த்தி உள்ளார்.  ஆனால், மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்தது இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களை நேரில் சந்திக்க வேண்டும். தனித்து போட்டியிடுவதால் ஏற்படுகின்ற பக்க விளைவுகளை தெரிவித்து அனைத்து பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகளும் ஓரணியில் திரண்டு அவர்களை வீழ்த்த வேண்டும் என்று வெளிப்படையாக பேச வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

தி.மு.க.வும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலமான கூட்டணியில் உள்ளது. கற்பனை கருத்துகள் பா.ம.க.வினர் அண்மையில் முதலமைச்சரை சந்தித்து பேசியதால் ஏதோ நான் அச்சப்படுவதாகவும், கலக்கமடைவதாகவும் கற்பனையான கருத்துக்களை பேசி வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் என்ற முறையில் அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். உதாரணமாக நான் பிரதமரை சந்திப்பதால் பா.ஜ.க.வுடன் இணைவதாக என்று அர்த்தம் இல்லை. பா.ம.க.விற்கு ஒரு கலாசாரம் உண்டு. கூட்டணியில் இருக்கும் போது அடுத்த தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எந்தக் கூட்டணியில் இருந்தார்களோ அந்த கூட்டணியில் இருந்து சற்று விலகி நிற்பார்கள். இதற்கு காரணம் எந்த பக்கமும் பேச முடியும் என்ற நிலைப்பாட்டை வெளிக்காட்டுகின்றனர். இது பேரத்தை அதிகரிப்பதற்காக செயல்.

தற்போது அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகி நிற்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளனர். இது அ.தி.மு.க. கூட்டணியில் தாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்கிறோம் என்று தி.மு.க. கருதத் தேவையில்லை, தி.மு.க.வுக்கும் நாங்கள் பேச தயாராக இருக்கிறோம் என்ற சமிக்கைதானே.. தவிர வேறொன்றுமில்லை.

தி.மு.க.வுடன் பேசிக்கொண்டு அ.தி.மு.க.வில் பேரத்தை கூட்டுவது, அ.தி.மு.க.வுடன் பேசிக்கொண்டு தி.மு.க.வில் பேரத்தைக் கூட்டுவது இது அனைத்தும் பா.ம.க.வின் தேர்தல் தந்திரம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் தி.மு.க. கூட்டணி தொடர வேண்டும் என்ற கருத்தை உணர்த்து கிறது. பா.ஜ.க. அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து கட்சி நிதி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. அனைத்தும் கணக்கில் வரும் பணம். கணக்கில் வராத பணம் என்பது தனியாக வைத்துள்ளனர்.

தங்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற வகையில் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

யாரிடம் கட்சி நிதி பெற்றார்களோ அவர்களுக்குத்தான் மத்திய பா.ஜ.க. அரசு ஒப்பந்த பணிகளை வழங்குகிறது. விலைவாசி உயர்வு கடுமையாக ஏறிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக சமையல் எரிவாயு விலை தற்போது உயர்த்தி உள்ளனர். பா.ஜ.க. மக்களுக்கான ஆட்சி நிர்வாகத்தை நடத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.