சென்னை: வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி டிச. 5-ந்தேதி மாநிலம் முழுவதும் பாமக போராட்டம் நடைபெறும் என அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களிடம் கூறனார். அப்போது, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரி டிசம்பர் முதல் வாரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட தலை நகரங்களில் போராட்டம் நடத்தப்படும். இதில் 30 வயதுக்கு கீழே உள்ள மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்பார்கள். 30 வயதுக்கு மேலே உள்ளவர்கள் போராட்டம் நடத்த உதவி செய்வார்கள் என தெரிவித்திருந்தார். மேலும், போராட்டத்தை வடிவமைக்க கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது டிசம்பர் 5ந்தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடுகோரி போராட்டம் நடைபெறும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு கோரி மாநிலம் முழுவதும் வருகிற டிசம்பர் 5-ந்தேதி போராட்டம் நடத்தப்படும். டிச.5-ந்தேதி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அறவழி தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வன்னியருக்கு 15% இட ஒதுக்கீடு கோரி பா.ம.க. தலைவர் அன்புமணி டிச.17-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்த நிலையில் ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.