மயிலம் சிவகுமார் மற்றும் சதாசிவம் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகள் பறிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள சதாசிவம் எம்.எல்.ஏ.க்கு பதிலாக வெடிக்காரனூர் வி.இ. ராஜேந்திரன் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள மயிலம் சிவகுமார் எம்.எல்.ஏ.க்கு பதிலாக கனல் பெருமாள் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையேயான மோதல் காரணமாக அக்கட்சியைச் சேர்ந்தவர்களே இவர்கள் இருவரையும் மாறிமாறி வசைபாடி வருகின்றனர்.

தந்தை – மகன் இடையே தாயார் முன்னிலையில் வீட்டிற்குள் எழுந்த மோதல் – பின்னர், குடும்பச் சண்டையாக மேடையேறியதைத் தொடர்ந்து, கட்சி விவகாரங்களில் குடும்ப உறுப்பினர்கள் பலரும் தனது விருப்பத்திற்கு எதிராக செயல்படுவதாக பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் புகார் கூறினார்.
அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவியை பறித்து அவர் இனி செயல் தலைவர் மட்டுமே என்றும் அறிவித்த ராமதாஸ் தலைவராக தானே நீடிப்பதாகக் கூறி தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
இதனால் இளைஞர்கள் பலரும் அன்புமணி பின்னால் வரிந்துகட்டிக்கொண்டு நிற்க, தானும் இளைஞர் தான் என்று மிடுக்கோடு நீச்சல்குளத்தில் நீந்திய காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு அசத்தினார் ராமதாஸ்.
இருந்தபோதும் ராமதாஸின் இந்த சால்ஜாப்புகள் சொந்த கட்சியினரிடமே எடுபடாத நிலையில் அவருடன் ஆரம்பகாலம் முதல் பயணித்த ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.
இதையடுத்து ஒருமாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவரவும் தந்தை ராமதாஸிடம் இருந்து உரிமையை மீட்கவும் அன்புமணி ராமதாஸ் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தனது பலத்தைக் காட்ட, வரும் புதனன்று (ஜூன் 25) கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ள ராமதாஸ், இரண்டு மாவட்ட செயலாளர்களின் பதவியை பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.