சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக, சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் சிகிச்சைக்குப் பின்பு தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்துவருகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
கடந்த பல மாதங்களாக பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்தார். சமீபத்தில்தான் முரசொலி கண்காட்சிக்கு சென்றுவந்தார்.
அதே போல,அவரது மகன் வழி பேரனுக்கும், நடிகர் விக்ரமின் மகளுக்கும் அவரது தலைமையில் திருமணம் நடந்தது.
இதற்கிடையே கருணாநிதியை முக்கிய தலைவர்கள் சிலர் சந்தித்து வந்தனர். அந்த வகையில் இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் ஜி.கே. மணி மற்றும் மூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர்.
கருணாநிதி – ராமதாஸ் சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்த்து.
சந்திப்புக்குப் பின்னர் கோபாலபுரம் இல்லத்திற்கு வெளியில் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்தார்.
அப்போது அவர், “கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார். இதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்னை யார் என்று கருணாநிதியிடம் ஸ்டாலின் கேட்டபோது, அவருக்கு எனது பெயரை முழுமையாக உச்சரிக்க முடியவில்லையே தவிர, என்னைப் புரிந்துகொண்டு உச்சரிக்க முயன்றார்.
மீண்டும் முன்பு போல இயல்பு நிலைக்கு வருவார். ஜி.கே. மணி, மூர்த்தி ஆகியோர்களின் தலையில் கைவைத்து அவர் ஆசீர்வாதமே செய்தார். முன்பைவிட தற்போது அவர் உடல்நிலம் தேறிவருகிறது.
நீங்கள் நூறு வயதைக் கடந்தும் வாழ வேண்டும் என்று அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறும்போதும், தொலைபேசியில் வாழ்த்துக் கூறும்போதும் நான் சொல்வது உண்டு” என்று ராமதாஸ் தெரிவித்தார்.