சென்னை: வரும் 18-ந்தேதி பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த கூட்டம் திண்டிவனத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள அதிகார மோதல் காரணமாக, பாமக நிறுவனர் ராமதாஸ் பல புதிய மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவித்து வருகிறார். இதுவரை 55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்கள் மாற்றியுள்ளார். அவர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், வரும் 18ந்தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் மகாலில் வருகிற 18-ந்தேதி பா.ம.க. வனனியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பாமக நிறுவனர் வீடு அமைந்துள்ள தைலாபுரம் தோட்டத்தில அவரது தலைமையில் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. இந்த வழக்கறிஞர் சமூக நீதி பேரவை கூட்டத்தில் 200 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து வரும் 18ந்தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும், மறுநாள் (19-ந் தேதி) இளைஞர் சங்க மாநில, மாவட்ட , நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 400 பேர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், போட்டி கூட்டங்கள் நடத்தி வரும் அன்புமணி அணியினரை எதிர்கொள்வதும் குறித்தும், வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை கவனிக்க சீனியர் தலைவர்களுக்கு மாவட்ட வாரியாக பொறுப்புகள் கொடுத்து தேர்தல் பணிகளை துரிதப்படுத்தவும் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.