சென்னை: அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 6 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இதில் 3 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமகா உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன, இதில் அதிமுக மட்டும் 66 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக காலை முதலே 10 தொகுதிகளில் மாறி மாறி முன்னிலை வகித்தது. நேரம் செல்லச்செல்ல முன்னிலை நிலவரம் மாறியது. தொடக்கத்தில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்த பாமக இப்போது வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகிக்கிறார். மயிலம் தொகுதியில் சிவகுமார், சேலம் மேற்கு தொகுதியில் அருள் ஆகியோர் வெற்றிபெறும் சூழலில் உள்ளனர்.
வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு அறிவித்த பின்னரே கூட்டணிக்கு சம்மதித்தது பாமக. 23 தொகுதிகளைப் பெற்று போட்டியிட்ட பாமக, அதையே சாதனையாக கூறி வாக்கு வேட்டையாடியது. இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு பாமகவுக்கு வன்னியர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவித்துள்ளன.