சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், கட்சியின் நிலைப்பாட்டை இரண்டு நாட்களில் அறிவிப்போம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்க உள்ளது. ஜூலை 10ந்தேதி வாக்குப்பதிவும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில், ஆண்டு கடந்த 2011ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆர். ராமமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கே.ரதாமணி வெற்றி பெற்றார். அதையடுத்து, 2019 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் ந.புகழேந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் திடீரென மறைந்த நிலையில், காலியாக உள்ள அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணி சார்பில், திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார். அதுபோல அதிமுக தரப்பிலும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் என்டிஏ கூட்டணியில் பாமக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், , “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக நிலைப்பாட்டை இரண்டு நாட்களில் நிர்வாக குழுக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவிப்போம் என்றார்.
நீட் தேர்வு குறித்த கேள்விக்கு, நீட் தேர்வு தேவை கிடையாது என்றவர்,. இந்த தேர்வு, சமூக நீதிக்கும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் எதிரானது, இதை இந்தியாவில் ரத்து செய்ய வேண்டும். குறைந்தது தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம் என்றார்.
மத்தியஅரசு தொடர்பான கேள்விக்கு, நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வந்துள்ளார். இந்தியாவை மூன்றாவது பொருளாதார நாடாக உலகளவில் எடுத்து செல்வார். அதே போல் மருத்துவர் ராமதாஸ் சொல்வதைப் போல் இந்தியா சார்ந்த சமூக நீதி பிரச்சனைகளை வலியுறுத்தித் தீர்வு காண்போம்.
காவிரி நீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். காவிரி தமிழ்நாட்டின் உயிர் நாடி பிரச்சனை, காவிரி மூலம் 50 லட்சம் விவசாயிகள், 4 கோடி மக்கள், 22 மாவட்டங்கள் பயனடைகின்றனர். அங்கு காங்கிரஸ் ஆட்சி, இங்கு திமுக கூட்டணி ஆட்சி ஆகிய இரண்டு அரசும் தான் இதற்கு முழு தீர்வு காண வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரிக்கிறதே என்ற கேள்விக்கு பதில் கூறிய அன்புமணி, தமிழ்நாடு முதலமைச்சர் போதைப் பொருளை மும்முரமாக ஒழிப்பதாகச் சொல்கிறார், ஆனால் செயலில் ஒன்றுமில்லை. நான் முதல் சந்திப்பில் முதலமைச்சரிடம் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்றேன். மேலும் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மாதம் தோறும் கூட்டம் நடத்த வேண்டும் என்றேன். ஆனால், கஞ்சா 1.0, 2.0 என சொல்லி 5 ஆயிரம் பேரை கைது செய்யப்பட்டார்கள். அவர்களும், ஜாமீனில் வெளியில் வந்துவிடுகின்றனர். மதுவை விட கஞ்சா போதைப்பொருள் பிரச்சனையால் மாணவர்கள் பாதிக்கப்படு கின்றனர். இதனைத் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.