சென்னை:

மிழகம் முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு வழிகாட்டும் அறிவிப்பு பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தை வரும் மார்ச் 1ம் தேதி துவங்கப்போவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நீதிமன்ற ஆணைகளையும், சட்டத்தையும் மதிக்காத ஆட்சி நடக்கும் மாநிலத்திற்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. நாட்டுநலன் மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை செயல்படுத்த தமிழக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி ஏராளமான சட்டப் போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் நடத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்குகளின் பயனாக தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டன. அதன்தொடர்ச்சியாக நாடு முழுவதும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளையும் மூட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 2700 மதுக்கடைகள் அடுத்த மாதத்திற்குள் மூடப்பட வேண்டும்.

அதற்கு முன்பாகவே சில முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவுகளை தமிழக அரசு இன்று வரை செயல்படுத்தவில்லை. ‘‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளுக்கான வழிகாட்டி பலகைகள், அறிவிப்புப் பலகைகள் மற்றும் விளப்பரப்பலகைகள் தடை செய்யப்படுகின்றன. அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்” என்று கடந்த 15.12.2016 அன்று அளித்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதன்படி தீர்ப்பு வெளியான நாளில் அனைத்து அறிவிப்பு மற்றும் வழிகாட்டி பலகைகள் அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுகுறித்து அரசுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் பலமுறை நினைவூட்டல்கள் வழங்கிய பிறகும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது மன்னிக்க முடியாத நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

அதேபோல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவதற்கான வழிகாட்டுதல்களையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது.‘‘மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பான தீர்ப்பை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை மாநில வருவாய்த்துறை, உள்துறை ஆகியவற்றுடன் கலந்தாய்வு நடத்தி தலைமைச் செயலாளர்களும், காவல்துறை தலைமை இயக்குனர்களும் ஒரு மாதத்தில் தயாரிக்க வேண்டும். அத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உரிய அதிகாரம் பெற்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் அந்தப் பொறுப்பை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதை அவர்களிடமிருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை பெற்று கண்காணிக்க வேண்டும்” என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. மதுக்கடைகளை அகற்றுவது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் கூட்டம் இன்று வரை நடக்கவில்லை. மதுக்கடைகளை அகற்றுவது குறித்த செயல்திட்டம் எதுவும் தங்களுக்கு வரவில்லை என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்கு இதுவே உதாரணமாகும்.

தமிழ்நாட்டில் மது குடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 16,000 ஆகும். சாலை விபத்துக்களுக்கு முக்கியக் காரணம் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது தான் எனும் போது, அந்த விபத்துக்களைத் தடுக்கும் விஷயத்தில் தமிழக அரசு இவ்வளவு மோசமாக செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஒருபுறம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் தமிழக அரசு, மற்றொருபுறம் தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்து தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது.

மதுக்கடைகளை அகற்றுவது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் தமிழக அரசைக் கண்டிக்கும் வகையிலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சென்னையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி மற்றும் அறிவிப்பு பலகைகள் மீது உச்சநீதிமன்றத் தீர்ப்பை விளக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.

இப்போராட்டத்தை சென்னையில் வரும் மார்ச் 1-ஆம் தேதி நான் தொடங்கி வைக்கிறேன். மது விலக்குக்கு ஆதரவான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்வார்கள். சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இத்தகைய போராட்டம் நடத்தப்படும்” – இவ்வாறு தனது அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.