சென்னை
பாட்டாளி மக்கள் கட்சியையும் தாங்கள் சங் பரிவார் (ஆர் எஸ் எஸ் குடும்பத்தினர்) ஆகவே பார்ப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சி பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். இந்த கட்சிக்கு எதிரிக்கட்சி என கூறப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளும் விழுப்புரம் மக்களவை தொகுதியில் நேரடியாக மோதுகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவி குமார் உதய சூரியன் சின்னத்தில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவி குமார் தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் பாட்டாளி மக்கள் கட்சியையும் ஆர் எஸ் எஸ் குடும்பத்தினர் எனவே கருதுகிறோம். ஆர் எஸ் எஸ் சிறுபான்மையினருக்கு விரோதி என்றால் பாமக தலித்துகளுக்கு விரோதி. இரு அமைப்புமே பயங்கரமானவை. ஆர் எஸ் எஸ் மூலமே இந்த கூட்டனி வழிகாட்டப்பட்டு வருகிறது. எனவே அவர்களை தோற்கடிக்க நாங்கள் திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளோம்.
பாமக தற்போது வன்னியர் அல்லோதோருக்கும் ஆதரவான கட்சியாக தன்னை காட்டிக் கொள்கிறது. கிராமப்புறங்களில் பல நில உரிமையாளர்கள் வன்னியர் அல்லாதவர்களாக உள்ளனர். எனவே பாமக வன்னியர் அல்லாதோரான நாயுடு, ரெட்டியார் மற்றும் முதலியார் போன்ற இனத்தாருக்கு ஆதரவு காட்டுவதாக கூறிக் கொள்கிறது. இது நாள் வரை பரம விரோதிகளாக இருந்த பாமக மற்றும் அதிமுக ஒன்றிணைந்தது இரு கட்சிகளுக்குமே மக்களிடையே பலவீனத்தை அளித்துள்ளது.
தற்போதுள்ள நிலையில் தலித்துகளுக்கு எதிரான கட்சியாகவே பாமக விளங்கி வருகிற்து. அந்த கட்சி தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை ஏற்படுத்துகிறது. ஆனால் நாங்கள் தமிழகத்தில் எங்கும் தலித்துக்களுக்கு எதிரான மனநிலையை காணவில்லை. இது ராமானுஜர், வள்ளலார் மற்றும் பெரியார் வாழ்ந்த பூமி.
எனவே பாமக தலித்துக்களுக்கு எதிரான போக்கை கைவிட்டு மீண்டும் சமூக நீதியை கையில் எடுக்க வேண்டும். அதை விடுத்து பாமக வெறுப்பு அரசியலை கையில் எடுத்தால் அது அந்த கட்சியை அழித்து விடும்” என தெரிவித்துள்ளார்.