பாட்டாளி மக்கள் கட்சி இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் அக்கட்சியின் மற்றொரு மாவட்ட செயலாளர் இன்று நீக்கப்பட்டுள்ளார்.

தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனை தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு திராவிட கட்சியின் கூட்டணியில் இடம்பெற்று தேர்தல் ஆதாயம் அடைந்து வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக-வுக்கு எதிராக அதிமுக உடன் கூட்டணி அமைத்து களமிறங்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதையடுத்து வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக கூட்டணியை பலவீனப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், பாமக-வில் ஒரு சிலர் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறவும் சிலர் திமுக ஆதரவு நிலைபாட்டிலும் உள்ளனர்.

இருந்தபோதும் இதுகுறித்து தெளிவான முடிவை எடுக்கமுடியாத நிலையில் இருப்பதை அடுத்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு கோஷ்டியாகவும் ராமதாஸ் தலைமையில் மற்றொரு கோஷ்டியாகவும் பாமக இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறது.

இதனால் பாமக-வுக்கு நல்ல எதிர்காலமும் ஆதாயமும் இருப்பதாக அரசியல் இடைத்தரகர்கள் இருதரப்பையும் உசுப்பேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கட்சி மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரில் யாருக்கு அதிக பங்கு என்பது குறித்து இருவருக்கும் இடையே எழுந்துள்ள மோதலைத் தொடர்ந்து மாவட்டந்தோறும் சென்று நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து வருகிறார் அன்புமணி.

மறுபுறம், தனக்கு எதிராக செயல்படும் மாவட்ட செயலாளர்களை பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் நீக்கி வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் தற்போது தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ.வை நீக்கியுள்ள ராமதாஸ் அந்தப் பதவியில் முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணனை நியமித்துள்ளார்.

இதனால் பாமக உடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களைக் கைப்பற்ற நினைத்திருந்த கட்சிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் இவர்களை சரிக்கட்ட பெரிதும் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.