நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என போர்க்குரல் எழுப்பும் பல மாநிலக் கட்சிகளில் சில, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறுவதாவது; தற்போதை நிலையில், எந்தவொரு மாநிலக் கட்சியும் அதிகபட்சம் 40 இடங்களைக்கூட வெல்லும் நிலையில் இல்லை. அப்படியிருக்கையில், அந்தக் கட்சிகள் பிரதமர் பதவியின் மேல் ஆசைப்படுவது அரசியல் நியாயமாக இருக்காது.

பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக ஏதோவொரு வேகத்தில் காங்கிரஸ் கட்சி குலாம் நபி ஆசாத் மூலமாக பேசிவிட்டாலும், பின்னர் உடனே சுதாரித்து தனது கருத்தை மாற்றிக்கொண்டது.

இப்போதைய நிலையில், மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரசேகர ராவ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பிரதமர் பதவிக்கு அடிபோடுவதாக பேச்சுக்கள் எழுகின்றன. இவை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், இவற்றில் யார் யாரை ஏற்பார்கள்? என்ற பெரிய கேள்வி எழுகிறது.

இவர்களில், குறிப்பாக இரண்டு தெலுங்கு தலைவர்களும், மிக அதிகபட்சமாக 20 இடங்களுக்குள் மட்டுமே வெற்றிபெறும் வாய்ப்பை உடையவர்கள்.

இந்தியா முழுவதும் பரவலாக, காங்கிரஸ் கட்சி, எப்படியும் குறைந்தபட்சம் 150 இடங்களோ அல்லது அதற்கு மேலோ பெற்றுவிடும் என்று ஒரு கணக்கு சொல்லப்படுகிறது. எனவே எப்படிப்பார்த்தாலும், அந்தளவு இடங்களைப் பெறும் கட்சியிடம்தானே பிரதமர் பதவி இருக்க வேண்டும்?

இதிலே போய் கர்நாடகா ஃபார்முலாவை கொண்டுவந்தால் எப்படி? அது ஒரு மாநிலம் அவ்வளவே! மேலும், அந்த ஃபார்முலா முழுவதுமாக 5 ஆண்டுகள் ஒர்க்அவுட் ஆகுமா? என இதுவரை யாரும் உறுதி சொல்லவில்லை. இன்னும் ஓராண்டைக்கூட குமாரசாமியின் அரசு கடக்கவில்லை என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

எந்தவித மோசமான வழியைக் கையாண்டேனும் ஒவ்வொரு மாநிலமாக கைப்பற்றி வந்த பாரதீய ஜனதாவுக்கு எப்படியேனும் செக் வைத்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில், காங்கிரஸ் செய்த தியாகம்தான் இன்றைய கர்நாடக அரசு. அந்த அரசு இப்போது எப்படிப்பட்ட பிக்கல் – பிடுங்கல்களில் சிக்கிக் கொண்டுள்ளது என்பதும் நாம் அறிந்ததே.

எனவே, காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு, பிரதமர் பதவியை அதற்கு தராமல், ஏதேனும் ஒரு மாநிலக் கட்சி வகிப்பதென்பது, எப்படி பார்த்தாலும் நடைமுறைக்கு ஒத்துவருவதாக தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியும் அதற்கு எந்தவகையிலும் சம்மதிக்காது என்றே அறிகுறிகள் தென்படுகின்றன.

கடந்த 2004ம் ஆண்டைவிட, இந்தமுறை காங்கிரஸ் கட்சி, அமைச்சர் பதவிகளை விட்டுக்கொடுப்பதில் மிகவும் தாராளமாக நடந்துகொள்ளும் என்பதே நடைமுறை சாத்தியமாக இருக்கிறது. ஏனெனில், கடந்த 5 ஆண்டுகளில் அந்தக் கட்சி சந்தித்த நெருக்கடிகள் அப்படியானவை.

எனவே, மாநிலக் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, காங்கிரசிடம் பேரம்பேசி, அதிக அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளலாமே தவிர, பிரதமர் பதவி மற்றும் துணைப் பிரதமர் பதவிகளை எதிர்பார்ப்பதெல்லாம் மோசமான அரசியல் சிக்கல்களுக்கே இட்டுச் செல்லும்.

ஏதேனும் ஒரு மாநிலக் கட்சியின் தலைவர் பிரதமர் பதவியில் அமர்ந்தால், பிறரின் ஈகோ ஏதேனும் ஒரு விஷயத்தில் கட்டாயம் கிளறிவிடப்படும். அது அரசில், எப்போதுமே சச்சரவைக் கிளப்பிக் கொண்டே இருக்கும். இந்த சூழலைப் பார்த்துக்கொண்டு பாரதீய ஜனதா நிச்சயம் அமைதியாக இருக்காது.

எனவே, மோடி – அமித்ஷா இணையின் சர்வாதிகாரத்தை அகற்றியே தீர வேண்டுமென்ற வைராக்கியத்தை கொண்டிருப்பதாய் கூறிக்கொள்ளும் சில பல மாநிலக் கட்சிகள், அரசியல் எதார்த்தத்தையும், நடைமுறை சாத்தியங்களையும் உணர்ந்து, 3 இலக்க இடங்களைப் பெறக்கூடிய காங்கிரசின் தலைமையில் ஆட்சியமைத்தால் மட்டுமே, அந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பதாய் அமையும்.

அந்த அரசு அப்படி நீடிப்பதன் மூலமே, அரசியல் அதிகார மட்டத்திலிருந்து மோடி – ஷா இணையை சுத்தமாக காலிசெய்து, நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தையும் பதற்றத்தையும் போக்கலாம் என்கின்றனர் அந்த அரசியல் விமர்சகர்கள்.

– மதுரை மாயாண்டி