டெல்லி: கடந்த 2 ஆண்டில் பிரதமரின் 12 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.30 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு மத்தியஅரசு பதில் அளித்துள்ளது. அதுபோல, கடந்த ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு விளம்பரங்களுக்காக  ரூ.2,700 கோடி செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்ந்து நேற்று தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கி வருகிறது. இதற்கிடையில், உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சகம் எழுத்துமூலம் பதில் அளித்து வருகிறது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சிவதாசன், பிரதமரின் வெளிநாட்டு செலவு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ள மத்திய அமைச்சகம்,  கடந்த 2 ஆண்டில் பிரதமர் 12 வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளதாகவும், அவரது பயணச் செலவு   ரூ.30 கோடி என  தெரிவித்துள்ளது.

அதுபோல, மாநிலங்களைவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் என்பவர் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு விளம்பரங்களுக்க செலவு செய்தது எவ்வளவு என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்தியஅரசு,  கடந்த 5 ஆண்டுகளில் விளம்பர செலவுக்காக ரூ.2,700 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது அதிகபட்சமாக 2018-19 நிதியாண்டில் ரூ.1,106 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.