கோவை: பிரதமர் மோடி இன்று மாலை கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதை யொட்டி, பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வர்கள் கருப்பு நிறத்திலான முகக்கவசம் (மாஸ்க்) அணிய வேண்டாம் என மைக் மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக அரசு நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்வகையில் இன்று காலை தமிழகம் வருகை தந்தார். டெல்லியில் இருந்து நாளை காலை 7.45 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர், காலை 10.30-க்கு சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி சென்றார். அங்கு, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில், மதியம் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பின்னர், 2.30 மணி அளவில் புதுச்சேரியில் இருந்த ஹெலிகாப்டரில் புறப்பட்டு, சென்னை விமான நிலையம், வந்தடைந்தவர், அங்கிருந்து தனி விமானத்தில் பிற்பகல் 3.35 மணிக்கு கோவை சென்றடைந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, அரசு விழா நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி அரங்குக்கு சென்றார்.
கொடிசியா அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்எல்சி), கப்பல் போக்குவரத்துத் துறை, மின் துறை, தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன்,ஏற்கெனவே முடிக்கப்பட்ட திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
பின்னர், மாலை 5 மணி அளவில் கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதையொட்டி, பாஜக முக்கிய தலைவர்கள் கோவையில் முகாமிட்டுள்ள நிலையில், கூட்டத்தைச் சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், கொடிசியா மைதானத்தில் நடைபெறும் மோடியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், கருப்பு நிற முகமூடிகளை அணிய வேண்டாம் என்று மைக் மூலம் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இது மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற மோடியின் நிகழ்ச்சியின்போதும், கருப்பு நிறத்திலான மாஸ்க் அணிந்தவர்களை, நிகழ்ச்சியில் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்து வந்த நிலையில், தற்போது கோவையிலும், அதே பாணி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கருப்புதான் தமிழனுக்கு பிடிச்ச கலரு என்பது ஊரறிந்த விஷயம்… ஆனால், பிரதமருக்கும், பாஜகவினருக்கும் கருப்பு என்றாலே அலர்ஜியாவிட்ட அவலம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் கோவை வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம், கொடிசியா தொழிற்காட்சி வளாகம், பிரச்சாரக் கூட்டம் நடக்கும் மைதானம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) ராஜேஷ் தாஸ், டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி அமரேஷ் புஜாரி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் ஆகியோர் தலைமையில் 6,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.