சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னை வருகை தருகிறார். தமிழ்நாட்டில் ரெயில்வே, நெடுஞ்சாலை துறை உள்பட பல்வேறு பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்கிடையில், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விசிக, கம்யூனிஸ் கட்சிகள் உள்பட 4கட்சிகள்  நாளையும், நாளை மறுதினமும் (25, 26 தேதிகளில்)  ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நேற்று இரவு பாஜக எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை கண்டுபிடிக்க சென்னை காவல்துறை 5 தனிப்படைகளை அமைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது. சென்னையில் அடுத்தடுத்து நடைபெறும் கொலை சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், நாளை பிரதமர் வர இருக்கும் சூழலில் அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நாளை சென்னை வரும் பிரதமரை  சென்னை விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கின்றனர். தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்பார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரதமர் மோடியுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அப்போது, முதல்வர் ஸ்டாலினும் தமிழ்நாட்டில் கோரிக்கை தொடர்பான மனு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மோடி அரசை கண்டித்து, நாளையும், நாளை மறுதினம் விசிக உள்பட 4 கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை அறிவித்து உள்ளன. இதில் ஏராளமானோர் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி அரசைக் கண்டித்து சி.பி.ஐ. (எம்) சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்எல்-லிபரேசன்) ஆகிய கட்சிகளோடு விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைந்து இன்று முதல் 31ந் தேதி வரையிலான விழிப்புணர்வு பரப்பியக்கம் மேற் கொள்வது மற்றும் 26 மற்றும் 27-ந் தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பொருட்கள் மீது அநியாயமாக விதிக்கப்பட்ட செஸ், சர்-சார்ஜ் என்ற கூடுதல் வரிகளைக் கைவிட வேண்டும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டும்.

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் அனைத்துக்கும் மாதம் ரூ.7500 நிதி உதவி வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பதிவு செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் 100 நாட்களுக்கு வேலை தர வேண்டும்.

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும், நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் முதலான கோரிக்கைகளை முன்வைத்து மே 26 , 27 ஆகிய தேதிகளில் தமிழகமெங்கும் ஒன்றிய, நகர, வட்டார தலைமையிடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.

நான்கு கட்சிகளின் தலைவர்களும் மே 27-ந் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த நிலையில், மேற்கண்ட கண்டன இயக்கத்தில் இடது சாரிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்று இதனை வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான இந்த கண்டன இயக்கத்துக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து ஜனநாயக சக்திகளையும் பங்கேற்க அழைக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

26ந்தேதி சென்னை வரும் பிரதமர் 5 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்! அமைச்சர் வேலு தகவல்…