டெல்லி: நாட்டின் புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று கூடுகிறது. இதில் புதிய தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி முதல் முறையாக தேர்வுக்குழு இன்று கூடுகிறது. அதன்படி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆகியோர் தேர்தல் ஆணையரை பரிந்துரைக்கும் தேர்வுக்குழுவில் உள்ளனர்.
இந்த நிலையில், தற்போதுள்ள தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அனூப் சந்திர பாண்டேவின் பதவிக்காலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்காக சட்ட அமைச்சர் தலைமையிலான தேடுதல் குழு, ஏற்கனவே 5 பேரின் பெயரை தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இல்லையென்றாலும், தேடுதல் குழு பரிந்துரைக்காத நபர்களையும், பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு, தேர்தல் ஆணையராக நியமிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.