லக்னோ: உ.பி. மாநிலம் லக்னோவில் இன்று நடைபெறும் டிஜிபி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் அவர் டிஜிபிக்கள் மாநாட்டில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

அனைத்து மாநிலங்களின் டிஜிபிக்கள் மற்றும்  மத்திய ஆயுதப் படைகளின் இயக்குநர்கள் கலந்துகொள்ளும் 56-வது மாநாடு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்  அமைந்துள்ள உ.பி. காவல்துறை தலைமையகத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும்  அஜித்தோவல் உள்பட முக்கிய உயர்அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, விவசாயிகளின் மீது உண்மையான அக்கறை இருந்தால், லக்னோவில் நடைபெறும் டிஜிபி மற்றும் ஐஜி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக் கூடாது.

ஏனென்றால், உ.பி. மாநிலம் லகிம்பூர் கேரி வன்முறையில், உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவருடன் மேடையைப் பகிரக் கூடாது என்று கூறியதுடன், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் மந்திரியின் மகன் என்பதால் அரசியல் அழுத்தம் காரணமாக உத்தரப்பிரதேசம் அரசு நீதியை நசுக்க முயன்றது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பம் நீதியை விரும்புகிறது. ஆனால், அஜய் மிஸ்ரா மந்திரியாக தொடர்ந்தால் நீதி வழங்கப்படாது.

மேலும், நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.