பிரதமர் மோடி, நேற்று முன்தினம் பேசிய வானொலி உரையான மான் கி பாத் நிகழ்ச்சியில், மதுரையைச் சேர்ந்ந்த சலூன்கடைக்கார் மோகன் என்பவரை பாராட்டினார். இந்த நிலையில், மதுரை சலூன் கடைக்காரர், தனது குடும்பத்தினருடன் பா.ஜ.வில் இணைந்ததாக செய்தி வெளியானது.
இந்த நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள மோகன், பாஜகவினர் கொடுத்தது வாழ்த்து அட்டை என நினைத்தேன் என்று தெரிவித்து உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக தினக்கூலிகள் உள்பட ஏழை எளிய மக்களின் அன்றாட உணவுக்கே அல்லல்படும் நிலை உருவானது.
இந்த நிலையில், தமிழகஅரசு சிலஉதவிகள் வழங்கிய நிலையில் ஏராளமான தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில், மதுரை தாசில்தார்நகரில் முடிவெட்டும் சலூன் கடை நடத்தி வரும் மோகன் என்பவர் தனது மகளின் உயர்படிப்புக்காக ரூ. 5 லட்சம் சேமித்து வைத்திருந்த நிலையில், அந்த பணத்தை, வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த ஏழை எளியவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவினார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது மான் கி பாத் நிகழ்ச்சியில், மோகனை குறிப்பிட்டு பாராட்டினார்.
இந்த நிலையில், மோகன், தனது குடும்பத்தினருடன் மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த அவருக்கு கட்சியினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றதாகவும், அவ்ரகளுக்கு பாஜக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கிய போட்டோக்களும் வெளியாகின.
இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த முடிதிருத்தும் தொழிலாளி மோகன், தான் பாஜகவில் சேரவில்லை என்றும், வாழ்த்து அட்டை என நினைத்து பாஜக உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டதாகவும்; தான் அனைத்து கட்சிக்கும் பொதுவான நபர் என்று கூறியுள்ளார்.
தன்னை எந்த கட்சிக்குள்ளும் அடைக்க வேண்டாம் என்றும் தெரிவித்த மோகன், பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியானதால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.