சென்னை: தமிழகஅரசு வெளியிட்டுள்ள செஸ் விளம்பரத்தில் பிரதமர் மோடி புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது தொடர்பான வழக்கில், தமிழகஅரசின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நிலையில், தீர்ப்பை ஒத்தி வைத்தது.
குடியரசுத் தலைவர், பிரதமரின் கீழ் நாடு நிர்வகிக்கப்படும் நிலையில் சர்வதேச நிகழ்வை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்த வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் விளம்பரங்களில் புகைப்படம் இடம்பெற்று இருக்கலாமே என்று நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
இந்தியாவில் முதன்முறையாக, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிகறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விளம்பர பதாதைகள், விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொர்பாக சிவகங்கையை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், செஸ் விளம்பரத்தில், மோடியின் புகைப்படம் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பியதுடன், தமிழகஅரசு இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்த முடிவெடுத்தது பெருமை மிக்கது. ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்கும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமரின் கீழ் நாடு நிர்வகிக்கப்படும் நிலையில் சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் விளம்பரங்களில் புகைப்படம் இடம்பெற்று இருக்கலாமே என்று நீதிபதி கேள்வி எழுப்பினர்.
‘செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறுவது சிறப்பு தான், நாம் அனைவரும் நாட்டிற்காகத்தான் உழைக்கிறோம். ஆனால் இதில் தவறு நடந்துள்ளது. பிரதமர் ஒப்புதல் இல்லாமல் , இந்த நிகழ்வு நடைபெறுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் பார்த்து கொள்ளும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றனர்.
அதைத்தொடர்ந்து வாதாடிய தமிழக அரசின் வழக்கறிஞர், இன்றைய நாளிதழில் கூட செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படம் வெளியிடப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார். மேலும், மனுதாரரின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கருத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.