டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில், பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள், பாரம்பரிய இசைக் கருவிகள் உள்ளிட்ட 1,900 பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதில் இருந்து கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அப்போது அந்த நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு பலப் பரிசு பொருட்களை அளித்துள்ளனர். அவைகள் அனைத்தும் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கடந்த இரு நாட்களாக ஏலம் விடப்பட்டது. இதில் சிற்பங்கள், ஓவியங்கள், சிலைகள், தலைப்பாகைகள், சால்வைகள், பாரம்பரிய இசைக் கருவிகள் என மொத்தம் 1,900 பரிசுப் பொருட்கள் அடங்கும்.
இவற்றில் மோடிக்கு கிடைத்த வெள்ளித்தட்டு ரூ.30 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதேபோல் மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை மோடி வணங்கும் புகைப்படம் ரூ.22ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது. மேலும், ஹனுமன் சிலை 10 வயது சிறுவனால் ரூ.800க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
இந்த ஏலத்தில் கிடைக்கும் தொகை அனைத்தும் தூய்மை கங்கா பணிக்காகவும், கங்கை பணிகளை பாதுகாப்பதற்காகவும் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 2015ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அவருக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு அந்த தொகை தூய்மை கங்கா திட்டத்திற்காக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.