தென்கொடியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 2018ம் ஆண்டிற்கான ’சியோல் அமைதி விருது’ வழங்கப்பட்டது. ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையேயான வித்யாசத்தை குறைத்ததற்காக மோடிக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது என தென் கொரியா தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கடந்த வியாழக்கிழமை தென் கொரிய தலைநகர் சியோலுக்கு சென்றார். தென்கொரியாவை அடைந்த மோடிக்கு அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பின்னர் யோன்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் -உடன் பங்கேற்றார். அப்போது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடிக்கு ‘சியோல் அமைதிப் பரிசு’ வழங்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்படும் என தென் கொரியா அறிவித்தது. அதன்படி, 2018ம் ஆண்டிற்காக விருதை மோடி பெற்றார். ஏழை-பணக்காரர் இடையிலான சமூகம் மற்ரும் பொருளாதார வித்யாசத்தை குறைத்ததற்காகவும், உலக அமைதிக்காக பங்காற்றியதற்காகவும் இந்திய பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கபடுவதாக தென் கொரியா தெரிவித்தது.
விருது பெற்றப்பின்பு பேசிய பிரதமர் மோடி, “ இந்த விருதை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்ட இந்திய கலாச்சாரத்துக்கான விருது இது “ என்று கூறினார்.
1990ம் ஆண்டு முதல் சியோல் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் நினைவாக ஆண்டுதோறும் சியோல் அமைதி விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஐ.நா. முன்னாள் செயலாளர் கோபி அன்னன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்டோர் சியோல் அமைதி விருதினை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.