டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அதிகாரிகள் உடலுக்கு பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங், அஜித் தோவல்  உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

குன்னூர் வெலிங்டன் ராணுவதளத்துக்கு மனைவி மற்றும் அதிகாரிகளுடன்  முப்படை தளபதி சென்ற  ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி வனப்பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கி  தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 13 பேரின்  உடல்களும்,  நேற்று காலை 10.40 மணி யளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு  உயிரிழந்த பிபின் ராவத் உள்பட உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து வீரர்களின் உடல்கள் தனி தனி ஆம்புலன்சில் சூலூர் விமானப்படைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.  அங்கு ராணுவவீரர்கள் கனத்த முகத்துடன் ராணுவ மரியாதையுடன் அவர்களின் உடல்களை டெல்லியில் உள்ள பாலம் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுச்சென்றனர்.

நேற்று ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 13 பேரின் உடல்கள் பாலம் விமான தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டடது.

அங்கு பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடலுக்கு அவரது மகள்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மற்ற ராணுவ அதிகாரிகள் உடலுக்கும் அவர்கள் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

டெல்லியின் பாலம் விமான தளத்தில் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பலருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதுபோல பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளிடன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர்.   சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பிற ஆயுதப்படை வீரர்களின் குடும்பத்தினரை நேற்று பாலம் விமான தளத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மறைந்த ராணுவ தளபதி உள்பட அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ராணுவத்தில் உயிரிழந்த சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 13 ராணுவ வீரர்களுக்கு ராணுவ தளபதி எம்எம் நரவனே, கடற்படைத் தலைமை அட்மிரல் ஆர் ஹரி குமார், இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  அவரது இறுதிச் சடங்குகள் இன்று முற்பகல் டெல்லி கான்ட் ப்ரார் சதுக்கத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயிரிழந்த ராணுவ அதிகாரிகள் விவரம்:

CDS Gen Rawat, Madhulika Rawat, L/Nk Vivek Kr, NK Gurushewak Singh, L/Nk BS Teja, Naik Jitender Kr, Lt Col Harjinder Singh, Brig LS Lidder, Hav Satpal Raj, Wg Cdr PS Chauhan, Sqn Leader K Singh, JWO Rana Pratap Das & JWO Pradeep A. lost their lives in #TamilNaduChopperCrash y’day