டெல்லி: புதிய வீரியமிக்க ஒமிக்ரான்  கொரோனா வைரஸ் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்த வைரஸ் தொற்றில் இருந்து, பாதுகாத்துக்கொள்ள மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். மேலும், சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்களை மதிப்பாய்வு செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது. தினசரி பாதிப்பு 10ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. அதே வேளையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 121 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வெளிநாடுகளில் பரவி வரும் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரசான ஒமிக்ரான்  குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில்,  கேபினட் செயலாளர் ராஜீவ் கெளபா,.பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா, ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனையின்போது புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் மூலமான பாதிப்புகள், தாக்கங்கள் குறித்தும் பிரதமர் மோடி, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அதிக கொரோனா பரவல் ஏற்படும் இடங்களை கட்டுப்படுத்த பகுதியாக தொடர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதுடன், மாநில அரசுகள்  தீவிர கட்டுப்பாடு, கண்காணிப்பு தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ் பெயர் ‘ஒமிக்ரான்’ ! உலக சுகாதார நிறுவனம்…