PM Modi bats for simultaneous elections, shifting to Jan-Dec fiscal year
ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்கள்: பிரதமர் மோடி ஆர்வம்!
நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, ஜனவரி – டிசம்பர் காலக்கட்டத்திற்கு நிதியாண்டு மாற்றம், வரும் ஜூலை முதல் ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றில் பிரதமர் மோடி ஆர்வத்துடன் இருப்பதை, நிதி ஆயோக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையில் இருந்து உணரமுடிந்தது.
பிரதமர் மோடி தலைமையில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையி் நேற்று நடைபெற்றது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஒரு சில முதல்வர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. மேற்கு வங்கம் சார்பில் அதன் நிதியமைச்சர் அமித் மித்ரா கலந்து கொண்டார். அதே நேரத்தில் பீகார் முதல்வர் நிதிஷ், திரிபுரா மற்றும் கேரளாவில் ஆட்சியில் உள்ள சிபிஎம் முதல்வர்கள் மாணிக் சர்க்கார், பினராயி விஜயன், காங். முதல்வர்கள் வீர்பத்ர சிங், அமரீந்தர் சிங், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். மாநிலங்களுக்கான நிதிக் கொள்கை குறித்த 15 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தாக்கல் செய்தார். இதையொட்டி அடுத்த 3 ஆண்டுகளுக்கான திட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தக் கூடிய ஜிஎஸ்டி சட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நிதி ஆயோக் குழுவினரின் நீண்ட, நடுத்தர மற்றும் குறுகிய கால செயல் திட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பயன் அளிக்கும். 15 ஆண்டுகால தொலைநோக்கு திட்டம், 7 ஆண்டு கால நடுத்தர கால திட்டம் மற்றும் 3 ஆண்டு செயல் திட்டங்களை நிதி ஆயோக் குழு வகுக்கிறது. அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சி மூலமாகத்தான் புதிய இந்தியா என்ற தொலைநோக்கை ஏற்படுத்த முடியும். உலக மாற்றங்களுக்கு ஏற்ப நாட்டை தயார்படுத்தும் வழிகளை வகுப்பதற்காகத்தான் டீம் இந்தியா குழு இங்கே கூடியுள்ளது. 2022ம் ஆண்டில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, நமது இலக்குகளை விரைவாக அடைய வேண்டிய பொறுப்பு இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் உள்ளது. இந்தியாவை மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிதி ஆயோக் எடுத்து வருகிறது. முன்னேற்றத்தை ஏற்படுத்த அரசு, தனியார் துறை மற்றும் சிவில் சொசைட்டி ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும். எல்லோரும் ஒருங்கிணைந்த கூட்டமைப்புதான் ஆயோக். இதன் பலமே நிதி ஆயோக் குழுவினரின் கருத்துக்கள்தான்.
பட்ஜெட் மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்காக மட்டும் நிதி ஆயோக் கூட்டத்துக்கு முதல்வர்கள் வர தேவையில்லை. திட்டங்களை உருவாக்குவதற்கு மாநிலங்களும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். அரசு கருத்துக்கள் மட்டும் அல்லாமல், வெளியில் உள்ள நிபுணர்கள் கருத்துக்களையும் நிதி ஆயோக் சார்ந்து இருக்கிறது. கடந்த இரு நிதியாண்டுகளில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்களுக்கான நிதி 40 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே மாநிலங்கள் முதலீட்டு செலவினங்களையும், தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதையும் விரைவு படுத்த வேண்டும்.
ஓரே நாடு, ஒரே நோக்கம் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் தான் ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்படுகிறது. மறைமுக வரிகளை அகற்றுவதற்கான சட்ட நடைமுறைகளை மாநில அரசுகள் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மோசமான கட்டமைப்புகள்தான் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கின்றன. எனவே, சாலைகள், துறைமுகங்கள், மின்சாரம், ரயில் சேவை போன்ற கட்டமைப்புளுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். இந்த நிதியாண்டில் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பட்ஜெட் தேதி மாற்றப்பட்டது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும் நிதியாண்டுக்கான வரையறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. ஆண்டுக்கான வேளாண் உற்பத்தியின் மதிப்புத் தெரிந்த உடனேயே நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே நிதியாண்டு ஜனவரி – டிசம்பர் என வரையறுக்கப்பட்டது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற விவாதத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
.