சென்னை:
ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் வரவேற்றனர்.
இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் 56-வது பட்டமளிப்பு விழா ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் பிரதமர் இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையம் அருகே பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி, நான் சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்கவே சென்னை வந்தேன், என்னை வரவேற்க நீங்கள் இவ்வளவு பேர் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
நான் அண்மையில் தான் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தேன் என்று கூறியவர், அங்கு தமிழ் மொழியின் பழமை மற்றும் பெருமை குறித்து அமெரிக்காவில் பேசினேன், தற்போது அங்குள்ள ஊடகங்கள் தமிழ் மொழி குறித்து அதிகம் செய்தி வெளியிட்டு வருகின்றன என்று வறினார்.
தொடர்ந்து பேசியவர், நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் உழைக்க வேண்டும், 130 கோடி மக்களும் ஒருங்கிணைந்து உழைத்தால் இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய கவுரவத்தை பெறும் என்றவர், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களையே தவிர்க்குமாறு கூறவில்லை, ஒரு முறை பயன்படுத்த தக்க பிளாஸ்டிக் பொருட்களே வேண்டாம் என்கிறேன் என்றார்.
அதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி அதிரடிப்படையினர் உள்பட ஐ.ஐ.டி. வளாகத்தை சுற்றி 2,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்