சென்னை: தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு, 8வது முறையாக இன்று பிற்பகல் வருகை தரும் பிரதமர் மோடி இன்று மாலை தென்காசியில் நடைபெறும் பிரமாண்டமான தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். அதனப்டி, திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி தமாக வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன், தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு கேட்கிறார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்றும் நாட்களே உள்ளன. தேர்தல் பிரசாரம் வரும் 17ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. கட்சி தலைவர்கள், முக்கிய பிரசார பீரங்கிகள் இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் களத்தில் இறங்கி பிரசாரம் கொண்டு வருகிறார். ஏற்கனவே ஏப்ரல் கடந்த 10-ந்தேதி வரை 7 முறை தமிழகத்திற்கு வந்து பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பேசியுள்ள நிலையில் தற்போது 8வது முறையாக மிண்டும் தமிழ்நாடு வருகை தருகிறார்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக அவர் நெல்லைக்கு மீண்டும் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பொதுக்கூட்டத்தில் குமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மற்றும் தென்காசி தொகுதி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி பேச உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் சிறப்பு விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தை சென்றடைகிறார். சுமார் மாலை 4.30 மணியளவில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்லும் அவர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்ட பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். கூட்டத்திற்குப் பிறகு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார்.
பிரதமரின் திருநெல்வேலி வருகையை முன்னிட்டு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பிரதமர் செல்லும் இடங்களில் பாதுகாப்பிற்காக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தென் மண்டல போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கண்ணன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 டி.ஐ.ஜிக்கள், 12 எஸ்.பிக்கள் மற்றும் 2,500 போலீசார் பாதுகாப்பு பணிககளில் ஈடுபட்டுள்ளனர்.