லடாக்: இந்திய எல்லையில் உள்ள ஒவ்வொரு அங்குலமும் நமது ராணுவ வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லடாக் விவகாரத்தில் இந்தியா, சீனா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இரு நாடுகளின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் எல்லையில் சீனா ஆயுத பலத்தை அதிகரித்து வருவதால், இந்தியாவும் பதிலடியாக ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று திடீர் பயணமாக லடாக் சென்றார் பிரதமர் மோடி. அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ராணுவ பாதுகாப்பு, வான்வெளி பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், பின்னர் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: கல்வான் பள்ளத்தாக்கில் நாட்டை காக்க உயிர் நீத்த வீரர்களுக்கு வீர அஞ்சலி. ராணுவ வீரர்களின் மன உறுதி மலை பலமாக இருக்கிறது. இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலகளவில் நமது நாட்டின் வலிமை என்ன என்பதை சொல்லி இருக்கிறது.
லடாக் இந்தியாவின் தலைப்பகுதி. இந்தியாவின் 130 கோடி குடிமக்களுக்கு இது பெருமையின் அடையாளமாகும். இந்த நிலம் நாட்டுக்காக தியாகம் செய்ய தயாராகவுள்ள மக்களுக்குச் சொந்தமானது.
லே பகுதியிலிருந்து சியாச்சின் வரை ஒவ்வொரு அங்குலமும் நமது வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் என்றார். லே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.