டெல்லி: பிரதமர் மோடி ஒரு கோழை…. அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது என  கடுமையாக விமர்சித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கிழக்கு லடாக் எல்லை விவகாரம் குறித்து  சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

லடாக் எல்லை பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்தார். அப்போது, கிழக்கு லடாக் எல்லையில் ஒரு அடி இடம்கூட விட்டுத்தர மாட்டோம் என்று கூறியதுடன், பல்வேறு தகவல்களையும் கூறினார். மேலும், மது படைகள் பிங்கர்-3 மலைப்பகுதிக்கு செல்வதாகவும் கூறினார்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தார்.

இந்திய பிராந்தியத்தை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற முடியாமலும் சீனாவை எதிர்க்க துணிவில்லாமலும் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஒரு கோழை என் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் அளித்த விளக்கத்தில் லடாக்கில் ஃபிங்கர் 4 என்ற பகுதியில் இருந்த படையினர்,  ஃபிங்கர் 3 என்ற பகுதிக்கு திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அந்த  இரண்டு முனைகளுமே இந்திய பிராந்தியம்தான். அப்படியிருக்கும்போது, இந்திய படையினர் ஏன் ஃபிங்கர் 4ல் இருந்து ஃபிங்கர் 3க்கு பின்வாங்க வேண்டும்.  இந்திய படைகளை பின்னோக்கி திருப்பி அழைத்துக் கொள்ள இந்தியா  ஏன் ஒப்புக் கொண்டது?”

சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உண்மை என்னவென்றால், பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.

இந்திய பிராந்தியத்துக்கு வர டெப்சாங் சமவெளி பகுதியை சீன படையினர் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கூறிய ராகுல்,  அவர்கள் அங்கு நுழைய எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள்? இதை எவ்வாறு இந்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்காமல் தவிர்த்தார்? என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார்.

நாட்டின் பிரதமர்  சீனாவுக்கு எதிராக நிற்கத் துணிவில்லாதவராக இருக்கிறார். இந்திய ராணுவத்தினரின் தியாகத்தை ஏமாற்றும் வகையில் அவர் செயல்படுகிறார். இந்தியாவில் உள்ள வேறு எவரும் இப்படி செய்வதை அனுமதிக்கக்கூடாது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பிராந்தியத்தை பாதுகாப்பது ஒரு நாட்டுப் பிரதமரின் கடமை. இதை அவரது பிரச்னை என்று என்னால் எப்படி விட்டு விட முடியும்?

எல்லைப்பகுதியில் நடைபெற்றுள்ள விஷயங்களைப்  பார்க்கும்போது, சீனாவிடம் நமது நிலத்தை இந்தியா கொடுத்திருப்பது தெளிவாகிறது. இந்திய பிராந்தியத்தை சீனாவுக்கு எப்படி விட்டுக்கொடுத்தனர் என்பதை இந்திய பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் விளக்க வேண்டும்,.

பிரதமர் மோடி நமது ராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார். ராணுவத்தின் தியாகத்திற்கு துரோகம் செய்கிறார்.

இவவாறு  காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய உள்துறை இணை அமைச்சர் பதில்

ராகுல் காந்தியின் கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டியிடம் கேட்டதற்கு, “இந்திய பிராந்தியத்தை சீனாவிடம் யார் கொடுத்தார்கள் என்பதை ராகுல் காந்தி அவரது தாத்தா நேருவிடம்தான் கேட்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு பதில் கிடைக்கும்,” என்று தெரிவிரித்துள்ளார்.

இந்த தேசத்தில் யார் தேச பக்தர், யார் அப்படி கிடையாது என்பதை பொதுமக்கள் நன்றாக அறிவார்கள் என்றும்  ராகுல் காந்தியின் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த மற்றொரு மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், “ராகுலின் விமர்சனம் முதிர்ச்சியற்றதாகவும் தவறானதாகவும் உள்ளது,” என்று தெரிவித்தார்.