டெல்லி: தமிழகத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தமிழகம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், திரிபுரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 6 நகரங்களில் வீடு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாக்கத்தில் ரூ.116.27 கோடி மதிப்பில் 1,152 வீடுகளை 12 மாதத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
413 சதுர அடியில் ஒரு படுக்கையறை, பால்கனி உள்ளிட்ட அம்சங்களுடன் வீடுகள் கட்டப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், பேரிடரை தாங்கும் வகையிலும் புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டப்படும். இந் நிலையில், தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் வீடு கட்ட பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு காணொளி காட்சி வழியாக அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.