டில்லி
நேற்று பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் ஐசிஎம்ஆர் இயக்குநருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் டில்லி ஆகிய இடங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. மாறாக தற்போது கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா நான்காம் இடத்துக்கு முன்னேறி உள்ளது
நேற்று டில்லியில் பிரதமர் மோடி நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வ்ர்தன், ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கொரோனா பரவுதல் அதிகரிப்பதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டம் இரு தினங்கள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் டில்லி முதல்வர் மற்றும் ஆளுநருடன் இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த கூட்டங்களில் கொரோனா பரவுதலைக் கட்டுக்குள் கொண்டு வர மருத்துவச் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளைத் தீவிர படுத்துவது குறித்து வலியுறுத்தப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது. நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அவசரக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராகும்படி மத்திய சுகாதாரத் துறைக்கு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.